வேதப் பகுதி மத்தேயு 25 : 1 - 13.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
புத்தியுள்ள வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பத்து கன்னிகைகளின் உவமையிலிருந்து காணலாம். பிறருக்கு கொடுத்து வாழ்வதை வேதம் சிறப்புற பாராட்டுவதை வேதத்தின் பல இடங்களில் நாம் கண்டிருக்கிறோம். மாறாக இங்கு தனக்குரியதை தனக்கு தேவையாக இருக்கும் நேரத்தில் மணவாளனுக்கு காத்திருக்கும் பரிசுத்த பெண்கள் (புத்தி இல்லாதவர்கள் இடமிருந்து) தங்களுடையதைக் காத்துக் கொள்வதை இந்த பத்து கன்னிகைகளின் உவமையில் நாம் காணலாம். இவர்கள் புத்தியுள்ளவர்கள் என்று வேதம் இவர்களை பாராட்டுகிறது!
தேவனுடைய வருகைக்கு காத்திருக்கும் நாம் எதிர்பாராத நேரத்தில் ஒரு வேளை,நாம் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேவன் வரும் பட்சத்தில் நாம் புத்தியுள்ள ஸ்திரீகளாய் ஆயத்தமாய் இருக்கிறோமா ?ஒரு நிமிட ஜெபம் ஒரு நிமிடம் ஆவியில் நிறைதல் அதே நேரம் 3 மணி நேரம் செல்போனில் கழித்தல் என இருப்பது எந்த விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.
சமையல் செய்தாலும் வண்டியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் தேவனோடு பேசிக் கொண்டிருங்கள். அவரோடு சஞ்சரியுங்கள். புத்தியுள்ள பெண்களோடு ஐக்கியமாய் இருங்கள். உங்களில் உள்ள அக்கினியை அபிஷேகத்தை அவித்து போடாது,அனல் மூட்டி எழுப்பிக் கொண்டே இருங்கள். கைவிடப்பட்டவர்களாய் எவரும் மாறிவிடாதபடிக்கு பிறரையும் ஆயத்தப்படுத்துங்கள்.
ஜெபம்:
அன்புள்ள இயேசப்பா கொடுத்தலில் புத்தி உள்ளவர்களாக இருக்க எப்பொழுதும் ஆவியில் அனலாய் இருந்து ஆயத்தமாயிருக்க எங்களுக்கு உதவுங்க. புத்தியுள்ள பெண்களோடு எங்களுக்கு சிறந்த ஐக்கியத்தை தாருங்க.
இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
Comments