
லூக்கா நான்காம் அதிகாரம் இயேசு சோதிக்கப்பட்டதை குறித்து பேசுகிறது. அதில் உள்ள ஒரு வசனம் என்னை ஸ்தம்பிக்க செய்தது வசனம் 5,6 ல் இவ்வாறாக பிசாசு ஏசுவிடம் கூறினான்.
"பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்."
வாசித்த எனக்கு ஆம்,உண்மைதானே பிசாசு பிரபலமான பலருடைய வளர்ச்சிக்கு பின் இருக்கிறானே!ஒருவேளை அவனிடம் தான் உலகத்தின் அதிகாரம் உள்ளது போல என்று கூட சிந்தித்தேன். அப்படியானால் கர்த்தருடைய பிள்ளைகள் எப்படி இந்த உலகில் நன்றாக வாழ்ந்திருக்க முடியும் என்ற எண்ணமும் வந்தது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இயேசு அதற்கு பதிலாக அதற்கு ஏற்றார் போல் ஏதும் சொல்லி இருப்பாரே!இயேசுவோ தன்னை தேவனுடைய குமாரனுக்கு மேலாக உயர்த்தி கண் வித்தை காட்டின பிசாசிற்கு சொன்ன பதில் " எனக்கு பின்னாகப்போ சாத்தானே "(லூக்கா 4 –8) என்பதுதான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது. இந்த பிசாசினுடைய பொய் பித்தலாட்டம் நிறைந்த பேச்சு ஏவாளிடமும் இயேசுவிடமும் ஒரே போல் இருந்தது என்று. தெய்வ மகிமையை விரும்பின அவன் இன்றும் உலகும் அதில் ராஜ்ஜியமும் தன்னுடையது என்று பொய்களைக்கூறி நம்மை சோர்வுரச் செய்கிறான்.
மத்தேயு 28: 18ல் இயேசு இவ்வாறு கூறுகிறார்.
"அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது".

ஆம் சத்தியமான( Truth) இயேசுவின் வார்த்தையின் படி சகல அதிகாரமும் அவருடையது. பூமியை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர். நம்மை ஆளுகிறவர், நம் குடும்பத்தை ஆளுகிறவர் கர்த்தர். நம் சபையை ஆளுகிறவர் கர்த்தர். சகல அதிகாரமும் மகிமையும் இயேசுவுக்கு மாத்திரமே உரியது. ஒரு நிமிடத்தில் உலகை காண்பிக்கும் வித்தை பிசாசினிடம் இருந்தது. ஆனால் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய். சத்தியம்(Jesus is the truth) என்னும் இயேசுவின் அதிகாரத்தில் நாம் நடக்கையில் இந்த பொய்,கண்வித்தை இவைகளெல்லாம் ஒன்றுமில்லாத பலம் இல்லாத ஒன்றே!
இயேசுவே சர்வ வல்லவர் அவரை அண்டிக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியின் பெலத்தினால் நிறைந்திருங்கள். பிசாசின் கிரியையை, ஆளுகையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கொண்டு கட்டுங்கள். தேவ சுகத்தை, சமாதானத்தை, நிறைவை இயேசுவின் நாமத்தில் கட்டவிழ்த்து விடுங்கள்.
அன்புள்ள இயேசுவே,
நீர் எங்கள் தேசத்தை ஆளுகை செய்யும். சகல அதிகாரம் உள்ளவரே எங்களுக்கு முன் செல்லும். உமக்கே சகல வல்லமையும் மகிமையும் கணமும் உரியது. உம் பிள்ளைகளான நாங்கள் வல்லமையான,மகிமையான,கணமுள்ள வாழ்வை வாழ எங்களை ஆசீர்வதியும்.
இயேசுவின் நாமத்தில் ஆமென்.
Comments